Friday, February 6, 2009

‘‘ராஜீவைக் கொன்றது யார்? பிரபாகரன் எப்போது பிடிபடுவார்?’’ -சு.சாமி சுடச்சுட பதில்கள்.


‘‘புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், இன்னும் நான்கைந்து நாட்களில் பிடிபடுவது உறுதி. ஜி.பி.எஸ் கருவி மூலம் அவர் பதுங்கியிருக்கும் இடத்தை உளவுத்துறையினர் கண்டுபிடித்துவிட்டனர்’’ என்று கூறும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி, ‘ராஜீவ்காந்தியைக் கொன்றது யார்?’ என்பதற்கும் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து 02.02.2009 அன்று சென்னையில் இருக்கும் தனது இல்லத்தில், பத்திரிகையாளர்களிடம் பேசிய சுப்பிரமணியசாமி, ‘‘தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் மறு அறிவிப்பு வரும்வரை காலவறையின்றி மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது, தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான ஒரு அறிவிப்பு. ‘ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ!’ என்ற பீதியில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புலிகளுக்கு ஆதரவான இயக்கங்களுக்கு அரசு அடிபணிந்திருப்பதையும் இது காட்டுகிறது. பாரபட்சமான இம்முடிவால், பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்தில்(விடுதியில்) தங்கிப்படிக்கும் சுமார் அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் சொல்லொனா துயரத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். ‘பீதியில் முடிவுகளை எடுத்துக்கொண்டிருக்கும் சிறுபாண்மை தி.மு.க அரசு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஆட்சி செய்யாது’ என்பதற்கு இதுவே சான்று. எனவே, மத்திய அரசு தலையிட்டு மைனாரிட்டி தி.மு.க அரசை உடனடியாக கலைக்கவேண்டும். மேலும், ‘வருகிற பாராளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டமன்றத்துக்கும் சேர்த்து தேர்தல் நடத்தவேண்டும்’ என்று மத்திய அரசை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விக்கு சீரியஸாக சு.சாமி அளித்த பதில்கள்:

இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும். தமிழர்கள் ஒன்றினையவேண்டும் என்று இளைஞர் முத்துக்குமரன் தீக்குளித்திருக்கிறாரே?

‘‘முத்துக்குமரன் மரணத்தில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. அது கொலையா? அல்லது தற்கொலையா என்பது கண்டறியப்படவேண்டும். நான் கேள்விப்பட்டவரை, கவன ஈர்ப்புக்காக முத்துக்குமரன் மூலம் ஒரு தீக்குளிப்பு நாடகத்தை அரங்கேற்ற சிலர் முயற்சித்துள்ளனர். ‘சும்மாவாச்சும் நீ தீக்குளிப்பதுபோல் மண்ணெண்ணையை ஊற்றிக்கொள். நாங்கள் காப்பாற்றிவிடுகிறோம்’ என்று முத்துக்குமாரிடம் தெரிவித்தவர்கள், பின்னர் திட்டமிட்டபடி எரியவிட்டு வேடிக்கை பார்த்துள்ளனர். நம்பிக்கை கொடுத்து துரோகம் செய்துள்ளார்கள். மீறி அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால், பெரும் தொகை அளிப்பதாகவும் பேரம் பேசியுள்ளார்கள். ஆக, ‘இது அரசியல் நாடகமா?’ என்பது குறித்து தமிழக அரசுதான் விசாரனை நடத்தவேண்டும். நாட்டுக்கு உண்மையை அறிவிக்கவேண்டும். மேலும், நான்கு இடங்களில் தேசியக்கொடியை எரித்துள்ளார்கள். அந்த தேசத்துரோகிகளை கைது செய்யவேண்டும்.

முத்துக்குமரன் மரணத்துக்குப் பிறகு தமிழகத்திம் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? உண்ணாவிரதம், போராட்டம் என்று மாணவர்களும் பெருந்திரளாக கூடியிருக்கிறார்களே?

‘‘எழுச்சி ஏற்பட்டிருப்பதாக சொல்வதெல்லாம் சுத்தப் பொய். இதெல்லாம் பத்திரிகைகள் கிளப்பிவிடும் வதந்திகள். இதையெல்லாம் பொதுமக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. மாணவர்கள் எங்கே போராட்டம் நடத்துகிறார்கள்? போராட்டம் நடத்துவதெல்லாம் கல்லூரிக்குப் போகாத ரவுடிகள், பொருக்கிகளின் வேலை. தங்களுக்கு இது தேர்வு நேரம் என்பதால், உண்மையில் படிப்பு குறித்துதான் மாணவர்கள் கவலையடைந்துள்ளார்கள்.’’

இலங்கை அரசு அறிவித்திருந்த 48 மணிநேர போர்நிறுத்த அறிவிப்பு, உலகத்தை ஏமாற்றுவதற்கான ராஜபக்ஷேவின் ராஜ தந்திரம் என்கிறார்களே?

அப்பாவித் தமிழர்களை காப்பாற்றுவதற்காக இலங்கை அரசு அறிவித்திருந்த காலக்கெடுவை விடுதலைப்புலிகள் மதிக்கவில்லை. அவர்கள் தமிழ் மக்களின் உயிர்களை தங்களின் கேடயமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு காலத்தில் புலிகளுக்கு நெருக்கமாக இருந்த யாழ்ப்பாணம் பேராயர், அதிபர் ராஜபக்ஷேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளுக்கு விடுதலைப் புலிகளே காரணம் என்று கூறியுள்ளதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இத்தகைய ஆபத்தான சூழ்நிலையிலும், போர் முனையிலிருந்து தமிழர்களை விடுவிக்காத புலிகளின் செயலை நான் வண்மையாகக் கண்டிக்கிறேன்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பெரும்பாண்மையான இடங்களை இலங்கை ராணுவம் கைப்பற்றிவிட்டதாகக் கூறப்படும் வேளையில், பிரபாகரன் தப்பிவிட்டதாகவும் வதந்தி பரவியுள்ளதே?

தமிழ்நாட்டில், இளைஞர் முத்துக்குமரன் தீக்குளித்தவுடன் இலங்கையில் இருந்து விடுதலைபுலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், சேட்டிலைட் தொலைபேசி மூலமாக இங்கே வைகோவை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். பின்னர் இத்தகவலை பிரபாகரனிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஜி.பி.எஸ் கருவியின் மூலமாக இதை உறுதிபடுத்தியிருக்கும் உளவுத்துறையினர், தற்போது பிரபாகரன் ஒளிந்திருக்கும் மறைவிடத்தையும் கண்டுபிடித்துவிட்டனர். எனக்குக் கிடைத்த தகவலின்படி, அவர் புதுக்குடியிருப்பு என்கிற இடத்தில் பங்க்கருக்குள் பதுங்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் நான்கைந்து நாட்களில் உயிருடனோ அல்லது பினமாகவோ அவர் பிடிபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பழிவாங்கும் விதமாக, சோனியாகாந்திதான் தற்போது தாக்குதலைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டிருப்பதாக ஒரு செய்தி உலா வருகிறதே?

அதெல்லாம் சும்மா. ராஜீவ்காந்தியை கொலை பண்ணச் சொல்லி புலிகளுக்குக் கட்டளையிட்டதே சோனியாகாந்திதான். மேலும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் நெடுமாறன், ம.தி.மு.க., பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், தி.மு.க, தி.க ஆகிய கட்சிகளுடன் இன்றுவரைக்கும் தொடர்பு வைத்துக்கொண்டிருக்கிறார். நியாயப்படி இவர்களுடன் கூட்டணி இருக்க முடியுமா? என்று கேட்கிறேன். இது மட்டுமா? திராவிடக் கழகத் தலைவர் வீரமணி மாளிகை கட்டுவதற்காக ஒரு ஏக்கர் நிலமும், கூடவே பணமும் கொடுத்தது சோனியாகாந்திதான். நளினியை விடுதலை செய்யச் சொல்லி பரிந்துரைத்ததும் சோனியாகாந்திதான். இதிலிருந்தே நமக்கு சந்தேகம் எழவில்லையா? ராஜீவ் கொலையில் சோனியாகாந்தி மட்டுமல்ல. பிரபாகரனைக் கைது செய்து இந்தியா கொண்டுவரவேண்டும் என்று காங்கிரசில் இருந்து ஒருவர்கூட குரல் எழுப்பவில்லை. ஒரு அறிக்கை காட்டச்சொல்லுங்கள் பார்ப்போம்! எல்லோருமே இப்போதுதான் புதிதாக கத்திக்கொண்டிருக்கிறார்கள். உண்மை என்னவென்றால், சோனியாவை ராஜீவ்காந்தி டைவர்ஸ் பண்றதா இருந்தார். இதைத் தெரிந்துகொண்டு ராஜீவ் குடும்பத்துச் சொத்துக்களை அபகரிக்கவேண்டும் என்பதற்காக சோனியாகாந்திதான் விடுதலைப் புலிகளோடு சேர்ந்துகொண்டு இந்தக் கொலையைச் செய்தார்.

சட்டமன்றத் தீர்மானம், பிரனாப் முகர்ஜியின் இலங்கைப் பயணம், 3&ம் தேதி செயற்குழு என்கிற தி.மு.க அரசின் செயல்பாடுகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

தி.மு.க ஒரு சினிமாக் கட்சி. எப்படி நாடகம் ஆடுவது என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ‘தமிழ்! தமிழ்!’ என்கிறாரே கருணாநிதி, அவரே ஒரு தெலுங்கர்தான். அவரது முன்னோர்கள், ஆந்திராவிலிருந்து பிழைக்க வந்தவர்கள். கருணாநிதி வீட்டில் தெலுங்கில்தான் பேசிக்கொள்வார்கள். நல்லா கேட்டுக்கங்க! ராஜினாமா நாடகம் போட்ட மாதிரிதான் சட்டமன்ற தீர்மானமும். இன்னொரு விஷயம் சொல்கிறேன். ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, இலங்கை அகதிகளின் குழந்தைகள் கல்வி முன்னேற்றத்துக்காக இட ஒடுக்கீடு தரவேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்திருந்தேன். இதை ராஜீவ் ஏற்றுக்கொண்டார். ஆனால், காங்கிரஸ், தி.மு.க.வின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் இதை ரத்து செய்துவிட்டது. பிறகு இது குறித்து நான் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் போட்டிருந்தேன். இது தற்காலிகம் என்பதால், தாராளமாக நடைமுறைப்படுத்தலாம் என்று நீதி மன்றமும் பரிந்துரை செய்தது. ஆனால், கருணாநிதி ஒத்துழைக்கவில்லை. கருணாநிதிக்கு தன்னுடைய குடும்பம்தான் முக்கியம். அடுத்ததாக கருணாநிதி சொல்லித்தான் பிரனாப் முகர்ஜி இலங்கை சென்றதாக கூறுவது முழுக்கப் பொய். அவர் இலங்கை செல்வதற்கு முன்பாக ஜனவரி 23-ம் தேதி என்னிடம் பேசிவிட்டுத்தான் சென்றார். சார்க் மாநாடு நடைபெறவிருப்பதால் அது சம்பந்தமாக செல்வதாகக் கூறினார்.

வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
தீவிரவாதிகளால், நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. ஜெயலலிதா தேசபக்தி மிகுந்தவர். எனவே நாட்டைக் காப்பாற்றுவதற்காக அ.தி.மு.க ஒரு தேசபக்திக் கூட்டணியை உருவாகவேண்டும். (சாமி, இந்த பதிலைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு நிருபர் குறுக்கிட்டு, ‘‘ஜெயலலிதா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதே...?’’ என்றார். அதற்கு சாமி, ‘‘ஊழல் மட்டுமே ஒரு குற்றம் இல்லை. ஏன் கருணாநிதி ஊழல் செய்யவில்லையா? ஜெயலலிதாவுக்கு தேசபக்தி அதிகம். அதனால் அவர் தலைமையில் கூட்டணி உருவாகவேண்டும் என்கிறேன்’’ என்றார். தொடர்ந்து கேள்வியெழுப்பிய அந்த நிருபர், ‘‘அப்படியானால், தேசபக்தி இருந்தால் போதும் ஊழல் செய்யலாம் என்கிறீர்களா? தேசத்தை சுரண்டுபவர்கள் தேசபக்தி மிகுந்தவர்கள் என்கிறீர்களா?’’ என்றார். ‘‘அப்படிச் சொல்லவில்லை. ஜெயலலிதா ஆட்சி செய்த கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏதாவது ஒரு ஊழல் குற்றச்சாட்டு அவர் மீது கூறப்பட்டுள்ளதா? அவர் பதவியில் இருந்தபோது சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தது. தேசவிரோத சக்திகளை அவர் அடக்கி, ஒடுக்கி வைத்திருந்தார். ஆக, இந்த தேர்தலில் கடைசி ஐந்து ஆண்டுகளைத்தான் பார்க்கவேண்டும். பழசை மக்களே மறந்துவிட்டார்கள்.’’ என்று பதிலுரைத்தவர், ‘‘தேசபக்தி கூட்டணி அமைந்தாலும், நாங்கள் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைப்பது குறித்து இப்போதைக்கு சொல்ல முடியாது. அதே சமயம் வீட்டில் சும்மாவாச்சும் தூங்குவேனே ஒழிய, கண்டிப்பாகக் கருணாநிதியுடன் கூட்டணி வைக்க மாட்டேன்’’ என்று தெளிவாக பதிலளித்தார்.

தொடர்ந்து, ‘இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கவேண்டும்’ என்பது குறித்துப் பேசியவர், ‘‘போர் வெற்றியடைந்து இலங்கை அரசு வெற்றி பெற்றால், அங்கே ‘ஃபெடெரல் கான்ஸ்டிட்யூஷன்’ உருவாக்கிடவேண்டும் என்பதுதான் ஜனதா கட்சியின் கருத்து. விடுதலைப் புலிகளை ராணுவ ரீதியாக ஒடுக்கிய பிறகு, தமிழர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று அதிபர் ராஜபக்ஷே அறிவித்துள்ளார். அந்த வகையில் இலங்கையில் தமிழர்களுக்கு மாநில சுயாட்சி வழங்கப்படுவது குறித்து இந்தியா உறுதியாக இருக்கவேண்டும். இந்த விஷயத்தில் இந்தியாவும், இந்தியாவின் பலமும் இலங்கையில் தலையிடும் என்பதை அவர்களுக்கு சொல்லிவிடவேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

1 comment:

rajan said...

you only , kumudam news and other paper see, after deside,

swamy is very joker